November 22, 2024

மீட்புக்குழுவினருடன் தன்னைத் தானே தேடிய நபர்!!

துருக்கி நாட்டின் புர்ஷா மாகாணத்தை சேர்ந்த 50 வயது நபர் முட்லு. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுடன் இணைந்து புர்ஷா மாகாணத்தில் உள்ள காட்டிற்குள் மது அருந்தியுள்ளார். மது போதையில் இருந்த அவர் நண்பர்களை விட்டு விலகி காட்டிற்குள் வழிதவறி சென்றுவிட்டார்.தனது கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் இது குறித்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு முட்லுவின் மனைவி தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த காட்டுப்பகுதியில் முட்லுவை தேடி மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த காட்டுப்பகுதியில் இருந்த ஒரு நபர் மீட்புப்பணியில் தானும் உங்களுடன் இணைந்துகொள்வதாக கூறி மீட்புக்குழுவினருடன் இணைந்துள்ளார். மீட்புக்குழுவினர் தன்னைத்தான் தேடுகிறார் என்பது தெரியாமல் முட்லு தன்னைத்தானே தேடியுள்ளார்.

ஆனால், மீட்பு நடவடிக்கையின்போது அதிகாரிகள் தன்னைத்தான் தேடுகிறார்கள் என்று முட்லுவுக்கு சில மணிநேரம் கழித்து தெரிந்துள்ளது. இதனால், அவர் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டுள்ளார்.

முட்லுவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மீட்புக்குழுவினர் அவரது பெயரை கூறி அழைத்துள்ளனர். அப்போது, நான் இங்கு தான் இருக்கிறேன்’ என்று முட்லு பதிலளித்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம், எனக்கு கடுமையான தண்டனைகளை கொடுத்துவிடாதீர்கள்… எனது தந்தை என்னை கொன்றுவிடுவார்’ என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முட்லுவை அவரது மனைவியிடும் ஒப்படைத்தனர். மேலும், மீட்புக்குழுவினருக்கே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தன்னைத்தானே தேடிய முட்லுவுக்கு அதிகாரிகள் அபராதம் ஏதேனும் விதித்தனரா? என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.