November 22, 2024

துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு  இறக்குமதியாளர்கள்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் தாமதமாகும் பட்சத்தில், அந்த பால்மா தொகையை வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள 3 இலட்சத்து 60 ஆயிரம் கிலோகிராம் பால்மாவை விடுவிப்பதற்கான டொலரை, அரசாங்கம் இதுவரை வணிக வங்கிகளுக்கு விநியோகிக்கவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களுக்காக தற்போது 37 இலட்சம் ரூபா தாமத கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதுமாத்திரமன்றி, துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன் ஒன்றிற்காக, கப்பல் நிறுவனத்திற்கு நேற்று முதல், நாளொன்றிற்கு தாமத கட்டணமாக 144 டொலர் மேலதிகமாக செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவை துறைமுகத்திலிருந்து வெளியில் எடுக்கும் போது, தாம் தாமத கட்டணமாக சுமார் 170 ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனால், இந்தோனேஷியா அல்லது பங்களாதேஷ் போன்ற வேறொரு நாட்டிற்கு இந்த பால்மாவை அனுப்புமாறு, தாம் குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்