புலம்பெயர் தமிழர்களைக் காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளைப் பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ( Sivagnanam Sritharan) தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஐக்கிய நாடுகள் மன்றம் வரை சென்று இலங்கையினுடைய அரசதலைவர் சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் இலங்கையினுடைய தமிழ் மக்களின் குரலாக இருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை நீங்கள் வாருங்கள் – நாங்கள் பேசுவோமென அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இதே அரசதலைவர் தான் தனது தேர்தல் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை பெற்று விடுவார்கள், எம்மை மின்சாரக் கதிரையில் ஏற்றிவிடுவார்கள் என்று சர்வதேச சமூகத்திற்கு பிழையான கருத்தைக் கொடுத்து நாட்டை பிளவுபடுத்துகிறார்களென சிங்கள மக்களினிடையே புலம்பெயர் தமிழர்கள் பற்றிய இனவாதக் கருத்துக்களை தெரிவித்து ஆட்சிக்கு வந்தார்.
புலம்பெயர் தமிழர்களைக் காட்டி, சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனர். சிங்கள மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் பொருளாதார நிலையை அழித்து, நாசமாக்கி, சிங்கள இளைஞர்களை இனவாத ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பிய இந்த அரசாங்கம் – இன்று அரேபிய நாடுகளுக்குச் சென்று கெஞ்சுகின்றனர். அரசாங்கம் ஏன் இரண்டு முகத்தை கொண்டு இதனைச் செய்கிறது.
புலம்பெயர்ந்தவர்களை பேச அழைப்பது தொடர்பாக, மக்களின் ஆணையை அதிகமாக பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் இதனை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். ஆனால் இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் அதனைச் செய்ய முன்வரவேண்டும்” என்றார்.