மன்னார் பிரதேசசபை மீண்டும் காங்கிரஸ் வசம்!
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு இன்று (29) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், நேற்று (28), கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை இன்று (29) ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், மனு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
20 உறுப்பினர்கள் மத்தியில், புதிய தவிசாளருக்கான தேர்தல் நடைபெற்றது.
அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கிடையே இடம்பெற்ற போட்டியில் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகளைப் பெற்று, ஒரு மேதிக வாக்கால் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.