வீதியால் சென்ற முன்னணி உறுப்பினர் கைது!
தனது அத்தியாவசிய தேவைக்காக சென்ற யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ்காந்தை பொலிஸார் கொரோனோ தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தமையை கண்டிக்கிறேன் என சக உறுப்பினர் கிருபாகரன் யாழ்.மாநகர சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.
அதன் போதே மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன் , சக உறுப்பினர் ராஜீவ் காந்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அதன் போது , மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ் காந்த் தனது அத்தியாவசிய தேவை கருதி அவ்வீதி வழியாக சென்ற போது, யாழ்.மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தூபிக்கு முன்பாக அசம்பாவிதம் இடம்பெற்ற வேளை அதனை பார்வையிட சென்று இருந்தார்.
அவ்வேளை யாழ்ப்பாண பொலிஸார் அவரை கொரோனோ தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தமையை மிக வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.
கடந்த 23ஆம் திகதி மதியம் 2.30 மணியளவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பொலிஸாரின் தடைகளை மீறி கற்பூரம் ஏற்ற முனைந்த போது கைது செய்யப்பட்டார்.
அதன் போது , யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ் காந்த் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையிலையே , இன்றைய தினம் ராஜீவ் காந்த் அத்தியாவசிய தேவைக்கு சென்ற போதே பொலிஸார் கைது செய்ததாக கூறி சக உறுப்பினர் கிருபாகரன் சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் , சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.