பிரான்சில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!
இன்று (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கோவிட் விதிகளுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆர்ஜொந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.விமலராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
பிரெஞ்சு தேசத்தின் தேசியக்கொடியை ஆர்ஜொந்தை நகர பிதா Monsieur Georges Mothron அவர்கள் ஏற்றிவைக்க,
தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்;கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.செவ்வேள் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தூபிக்கான ஈகைச்சுடரினை 17.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் சமரின்போது வீரச்சாவடைந்த கணனிப்பிரிவுப் பொறுப்பாளர் வீரவேங்கை இதயன் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க,
கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின்போது 02.04.2000 அன்று இயக்கச்சிப் பகுதியில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். காண்டீபன் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க,
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மன்னார் சிலாபத்துறை இராணுவமுகாம் முற்றுகையின்போது வீரச்சாவடைந்த லெப்.நாதன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தூபிக்கான மலர்மாலையை பிரெஞ்சுப் பாராளுமன்ற முன்னைநாள் உறுப்பினர் Monsieur Philippe Doucet அவர்கள் அணிவிக்க,
கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை 13.07.1991 அன்று ஆனையிறவு சமரின்போது, வீரச்சாவடைந்த வினோஷா அவர்களின் சகோதரி அணிவிக்க, தியாகதீபம் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களின் துணைவியாரான ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை நிர்வாகி அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் உணர்வோடு அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவிகளின் “தனக்கென வாழா..” என்றபாடலுக்கான எழுச்சி நடனத்தோடு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுறப்பாளர் அவர்களின் பிரெஞ்சு மொழியிலான உரை இடம்பெற்றதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆர்ஜொந்தை நகர பிதா Monsieur Georges Mothron அவர்களின் உரை இடம்பெற்றது. எமது மக்களின் போராட்டம் தொடர்பில் தமது ஆதரவை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவியின் கவிதை, ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவியின் பேச்சு, சோதியா கலைக் கல்லூரி மாணவியரின் கவிதை, பொபினி தமிழ்ச்சோலை மாணவர்களின் “மூச்சிருக்கும் நேரமெல்லாம்…” என்ற பாடலுக்கான நடனம், ஆர்ஜொந்தை இளையோர் அமைப்பைச்சேர்ந்த செல்வன் நிதர்சன் ஞானசீலன் அவர்களின் பேச்சு, சோதியா கலைக்கல்;லூரி ஆசிரியை திருமதி கீர்த்தனா அவர்களின் தியாக தீபம் நினைவுசுமந்த கவிதை, சேர்ஜி தமிழ்ச்சோலை மாணவர்களின் ‘தியாகத்தீயில்…” என்ற பாடலுக்கான நடனம், ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவியரின் ‘வெள்ளிமயில் துள்ளிவரும்…” என்றபாடலுக்கான நடனம், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் சஞ்ஜித் அவர்களின் பிரெஞ்சுமொழியிலான பேச்சு போன்ற நிகழ்வுகளோடு, தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
எழுச்சிப் பாடகர் செங்கதிர் அவர்கள் தனது குரலில் பாடிய தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுசுமந்த பாடலை உணர்வோடுபாடியதுடன், நேற்று கனடா மண்ணில் சாவடைந்த தமிழீழ எழுச்சிப்பாடகர் வர்ண்ணஇராமேஸ்வரன் அவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவருக்கு அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் குறித்த மாவீரர்கள் தொடர்பில் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அதேவேளை, கோவிட் 19 தொற்றுக்காரணமாக தாயகத்தில் மறைந்த ஈழத்தின் புகழ்பூத்த வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன் அவர்கள் குறித்தும், கனடா மண்ணில் சாவடைந்த தமிழீழ எழுச்சிப்பாடகர் வர்ண்ணஇராமேஸ்வரன் அவர்கள் குறித்தும் நினைவுகூர்ந்த அதேவேளை, எத்தனை பேரிடருக்கும் மத்தியில் குறித்த நிகழ்வு பேரெழுச்சி கொண்டுள்ளதாக அவருடைய உரை உணர்வாக அமைந்திருந்தது.
காலை 10.00 மணிக்கு அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்ட மூதாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு மாலை 17.00 மணிக்கு குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டு உண்ணாவிரதம் நிறைவுசெய்யப்பட்டது.
நிறைவாக கொட்டும் மழைக்கு மத்தியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்த பின்னர். தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பிரெஞ்சுத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.