திலீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலிக்கின்றது தமிழர் தாயகம்!
தியாதீபம் திலிபன் அவர்களது 34 ஆவது நினைவேந்தலை பொது வெளியில் முன்னெடுக்க இலங்கை அரசு தடுத்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் வீடுகள் தோறும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
எனது குடும்பத்துடன் அனுஸ்டித்த சூநினைவேந்தல் எமது உரிமை அதனை யாரும் தடுக்க முடியாதென தமது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பலரும் பிரசுரித்தும்வருகின்றனர்.
இதனிடையே தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினார்.வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
முல்லைத்தீவில் பிரத்தியேக இடத்தில் தியாக தீபம் திலீபனுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அ.ஜே. பீற்றர் இளஞ்செழியன், இன்றைய தினம் (26) காலை 11 மணியளவில் மலர் தூபி பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
நேற்று (25) பீற்றர் இளஞ்செழியனுக்கு அவரது தந்தையாரின் பெயரில் முல்லைத்தீவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை வழங்க வந்த காவல்துறையினர், இறந்த எனது தந்தைக்கு உண்ணபிலவில் அமைந்துள்ள கத்தோலிக்க சேமக்காலையில் சென்று வழங்குமாறு தெரிவித்து, முல்லைத்தீவு தலைமை காவல்துறை அதிகாரி உள்ளிட்டவர்களை பீற்றர் இளஞ்செழியன் திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், பீற்றர் இளஞ்செழியனின் வீட்டை சுற்றி புலனாய்வளர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அறியமுடிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
தாயகம் எங்கும் திலீபனின் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில், இராணுவம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.