கழுத்தளவு பிரச்சினையில் திண்டாடும் தமிழ் மக்கள்- அகத்திய அடிகளார் மற்றும் ஆயர் தொடர்பில் செல்வம்!
வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியை வரவேற்பதுடன், முஸ்லிம் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தவத்திரு அகத்தியார் அடிகளார் மற்றும் திருகோணமலை மாவட்ட ஆயரும் இணைந்து வடக்கு கிழக்கில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எங்களுடைய மக்களின் பிரச்சனைகளை ஒருமித்த நேர்கோட்டில் கையாள்வதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது. அந்த வகையில் அதனை நாம் வரவேற்கின்றோம்.
எங்களது மக்கள் கழுத்தளவில் பிரச்சனைகளை தாண்டி திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒற்றுமை முக்கியம் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி எங்களது இனத்தின் பிரச்சனையை ஒற்றுமையாக உலகத்திற்கு சொல்லுகின்ற ஒரு வாய்ப்பை இந்த முயற்சி ஏற்படுத்தும்.
ஆயரும், அகத்தியார் அடிகளாரும் இணைந்து ஒரு அமைப்பாக இதனை செய்திருப்பதாக தெரிவிக்கப்டுகின்றது. இந்த விடயத்தில் ஒரு ஆலோசனையை சொல்ல விரும்புகின்றேன். வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் சகோதரர்களுடைய பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக அவர்களது தேசிய பிரச்சனையை வெளிக் கொண்டு வரும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது முஸ்லிம் தலைவர்களையோ இணைந்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆலோசனை.
இரண்டாவது மலையக மக்கள் படுகின்ற துன்பங்களை வெளியில் கொண்டு வருகின்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் இந்த விடயத்தில் உள்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கின்றேன். இந்த முயற்சியை நான் வரவேற்கின்றேன்.
ஒற்றுமையாக எங்களுடைய மக்களது பிரச்சனைகளை வெளியுலகிற்கு கொண்டு வருகின்ற போது அது மக்கள் சக்தியாக பார்க்கப்படும். அது ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலமையை உண்டு பண்ணும். இது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். அந்த வகையில் இந்த முயற்சிக்கு எங்களுடைய ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.