சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது இலங்கை :நிரோஸ்!
சர்வதேசம் சென்று காலஅவகாசத்தை கோருவதற்கான நோக்கத்தோடு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதாக இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறதென தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் சர்வதேச அளவில் பல சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்கள். சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று சொல்கின்றார்கள். ஆனால் இங்கே வருடக்கணக்கில் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணையின்றி சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். .
இடையிடையே ஓரு சிலர் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் விடுவிக்கப்பட்டு வருகின்றபோதும் ஏராளமானவர்கள் தொடர்ச்சியாக சிறைகளில் இருந்து வருகின்றார் அவர்களை விடுவிப்பது என்பது ஜனாதிபதியை பொறுத்தவரையில் ஒரு சாதாரண விடயம்.பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கலாம். கோத்தபாய பதவியேற்றதன் பின்னர் பொதுமக்களை கொன்ற இராணுவ அதிகாரியை விடுதலை செய்திருந்தார். பாரத லகஸ்மன் கொலை தொடர்பாக சிறையிலிருந்ததுமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு பாரதூரமான மனித உரிமை மீறல்களை செய்தவர்களுக்கு ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் விடுதலை செய்திருந்தார். ஆனால் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்தும் அப்பாவி இளைஞர்கள் அவர்களுடைய முதுமைக் காலம் வரையிலே சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை விடுவிப்பதற்கு போதுமான நடவடிக்கை இல்லை.
சிறைக்கு பொறுப்பான அமைச்சர் அண்மையிலேயே மிலேச்சத்தனமாக நடந்து, அரசியல் கைதிகளின் உரிமையை பறிக்கக்கூடிய வகையில் நடந்திருக்கின்றார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அரசியல் கைதிகளிற்கு தண்டனை வழங்கிய பின்னர் பொதுமன்னிப்பளிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் அறிவிப்பு கண்துடைப்பெனவும் தியாகராசா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்களின் தாய்மார்கள் இன்றும் வீதிவீதியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் உடைய அரச படையினரிடம் சாட்சியங்களின் அடிப்படையில் சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சர்வதேசம் சென்று காலஅவகாசத்தை கோருவதற்கான நோக்கத்தோடு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போவதாக சில பல விடயங்களை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உள்நாட்டு பொறிமுறை அடிப்படையில் தீர்வு வழங்கப் போகின்றோம் என கூறுகின்றனர். காணாமல்போனவர்களுக்கு மரணசான்றிதழ் வழங்கப் போகின்றோம் என கூறியுள்ளனர். இந்த இடத்தில் நாம் ஒரு கேள்வியை கேட்கின்றோம்.
காணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதாக சொல்வது, இவர்களை கொன்று விட்டேன் என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்கின்றதா?
வலி வடக்கில் பல தனியார் காணிகளில் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருக்கின்றது. இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அதிக அளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விடுதலைப் புலிகளை அழித்தது போல கொரோனாவை அழித்து விடுவோம் என்று கூறியிருந்தார். அந்த அடிப்படையில்தான் என்று அரசாங்கம் பாதுகாப்பு சாவடிகளை அதிகரிக்கின்றதா தெரியவில்லை. வைத்தியர்களின் பணியில் இராணுவத்தின் தலையீடு மிக மோசமாக உள்ளது என்றார்.