இலங்கை முழுவதும் படையினர் ஆட்சிக்குள்?
ஜனாதிபதியின் நியூயோர்க் பயணத்தின் மத்தியில் பொதுஜனபெரமுன பங்காளிகள் அமைச்சு பதவிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளதால் அரசியல் ஸ்திரதன்மை பாதிப்படையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் எனும் பெயரில் நாடு பூராகவும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் படையினரது கட்டுப்பாட்டினில் இலங்கை முழுவதையும் வைத்திருக்கும் நகர்வில் கோத்தா குதித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் கெரவலப்பிட்டிய உடன்படிக்கைக்கு இது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக கூறப்படுகிறது .
கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வலுவான எதிர்க்கட்சியாக பணியாற்றிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மூன்று வலுவான நபர்களின் இராஜினாமா தொடர்பாக தெற்கில் பேசப்படுகின்றது.