November 22, 2024

எங்களிற்கு கப்பலோ விமானமோ வரவில்லை!

இலங்கை ஜனாதிபதி தெரிவிப்பதைப்போல உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், சர்வதேச விசாரணையை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கோருகின்றனர். தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலையை விசாரிப்பதா? எனவும் கேள்வியெழுப்பினர்.

காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்குவததே ஜனாதிபதியின் பதிலாக இருக்கிறது. இறுதி யுத்தக்காலத்தில் தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுச் சென்ற ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீதரன் எம்.பி, இம்மாதம் 12ஆம் திகதி அனுராதபுர சிறைச்சாலைக்குள் நுழைந்து அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து, சப்பாத்துகளை நக்க சொல்லியுள்ளனர். அத்துடன், அவர்களை சுட்டுக்கொள்வேன் என முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவமானது, தற்போதைய அரசாங்கத்தின் ஏதேச்சதிகாரத்தையே காட்டுகிறது.

கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் அனுராதபுரத்துக்குப் பயணித்து மதுபோதையில் தனது நண்பர்களுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளார். இச்செயற்படானது சட்டம், நல்லிணக்கம் ஆகியவற்றைக் கேள்விக்கு உட்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

சாதாரண ஒருவரிடத்தில், துப்பாக்கி அல்லது வெடிப்பொருள்கள் இருந்துகைப்பற்றப்பட்டிருந்தால், அவ்வாறானவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால், லொஹானின் விவகாரத்தில் அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை. அவரிடமிருக்கும் சகல அதிகாரங்களை பறித்து, அவரை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையின் வரலாற்றில் சிறைச்சாலைகள் அதிகாரிகளாலும், அவர்களின்அனுசரணையிலும் எராளமான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.அதேபோல நீதிமன்ற உத்தரவின்றி சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு சக கைதிகளால் கொடுரமான முறையில் மரண தண்டனைவழங்கப்பட்ட சம்பவங்களையும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

இதுவரையில் எந்தவொரு படுகொலைக்குமான நீதி கிடைக்கவில்லை.லொஹான் ரத்வத்தையின் செயற்பட்டால் தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி ரயில் நிலையத்தில் 1985 ஆம் நின்றிருந்தவர்கள் மீது இராணுவ சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். அதில், சுமார் 10 பேர் மரணித்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர் ஒரு மனநோயாளி எனக்கூறப்பட்டது. லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை சுட்டிக்கொன்றிருந்தால், அவரை இந்த அரசாங்கம் ஒரு மனநோயாளி என கூறியிருக்குமா? எனவும் அவர் இதன்போது சபையில் வினவினார்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுப்படுத்துவதாக ஜ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, ஐ.நா பொதுச்செயலாளரிடம் கூறியிருக்கிறார்.

இறுதி யுத்தக்காலப் பகுதியில் ஓமந்தையில் வைத்து தனது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களே காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்குவதா ஜனாதிபதியின் பதில் என வினவினார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டுள்ளனரா?ஒப்படைக்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என அவர்களது உறவுகள் காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இருந்த ஐ.நா சர்வதேச நிறுவனங்கள் முன்பாக2008ஆம் ஆண்டு சென்றிருந்த எம்மக்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாமென கண்ணீர் மல்கதெரிவித்தார்கள. எங்களை படுகொலை செய்வார்கள். எங்களை இலங்கைஅரசாங்கம் கொல்லப் போகிறது என அவர் கண்ணீரோடு தெரிவித்தார்கள்.

எனினும் தமிழ் மக்களை நடுத்தெருவில் அப்போது விட்டுச் சென்ற ஒவ்வொருபன்னாட்டு நிறுவனங்களும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அப்கானிஸ்தானிலிருந்து அந்த மக்களை வெளியேற்ற விமானங்கள்அனுப்பப்பட்டன. எனினும் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது எங்களை பாதுகாக்க எவரும் விமானங்களை அனுப்பவில்லை. எவரும் கப்பல்அனுப்பவில்லை என்றார்.

உள்ளக விசாரணைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும் என அரசாங்கம்

சொல்கிறது. சுட்டவர்கள் நீங்கள், பொஸ்பரஸ் குண்டுகள், கொத்தணி

குண்டுகளை வீசி கொன்றவர்கள் நீங்கள். 4 இலட்ச மக்கள் இருக்கும்போது

வெறும் 70 ஆயிரம் மக்கள்தான் இருப்பதாக உணவனுப்பியவர்கள் நீங்கள்.

பட்டணியால் கொல்லப்பட்டவர்கள் நாங்கள். கொலையாளியே கொலையை

விசாரிப்பது நியாயமா? எனவே உள்ளகவிசாரணையை நாம் கேட்கவில்லை.

பாதிக்கப்பட்ட நாங்கள் (தமிழ் மக்கள்) சுயாதீனமான, தமிழ் மக்கள் நம்பக்கூடிய

நேர்த்தியான சர்வதேச விசாரணையை கேட்கிறோம் என்றார்.