தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் – தமிழர்கள் அறைகூவல்
சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது. குறிப்பாக சிங்களப் பேரினவாத அரசினால் மெற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சி ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) எழுச்சிக்கோசங்களோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறக்க எழுச்சிகரமான மக்கள் வெள்ளத்தோடு மேலும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பித்து 6 ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் 1280 Km பயணித்து முக்கிய பல அரசியல் மையங்களின் ஊடாக ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என 23ம் தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்கள் தம் விடுதலைப்பயணத்தில் தாம் கண்ட அரசியல் முன்னேற்றத்தினையும் அனுபவங்களினையும் மக்களோடு பகிர்ந்து கொண்டனர். சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினவழிப்பின் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் தங்கள்
சாட்சியங்களை வாய்மூலமோ எழுத்துமூலமோ நிரூபிப்பதன் ஊடாக கால தாமதமின்றி சிங்களப் பேரினவாத அரசினை சர்வதேச சமூகம் தண்டிக்க முடியும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளுக்கான அறைகூவலும் மனித நேய செயற்பாட்டாளர்களால் விடப்பட்டது.
தொடர்ந்தும் நடைபெற்ற நிகழ்வில் எழுச்சிகரமான கவிதைகளும் , தமிழ் , டச்சு,பிரஞ்சு, மற்றும் ஆங்கில மொழியிலுமாக இளையோர்களால் எழுச்சி உரை நிகழ்த்தப்பட்டது. பன்னாட்டு வாழிட உறவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிரொலியினை அழுத்தம் திருத்தமாக இடித்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று (20/09/2021) தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 6வது நினைவு நாளின் 34 ம் ஆண்டில் நாம் நின்றுகொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்னும் விடுதலைப் பசி தீராத எம் திலீபன் அண்ணாவின் கனவும் அற்பணிப்பின் நோக்கமும் ஈடேற வேண்டும் என்றால் தமிழ் மக்கள் அனைவரும் தம் வாழிட நாடுகளில் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாம் வாழும் நாடுகள் செவிமடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். காலம் தந்த அரிய வாய்பினை தவறவிட்டு வரலாற்றுப் பெரும் துயருக்கு சொந்தமாகாது இனிதே எம் தமிழீழ மண்ணை மீட்டெடுப்போம் வாரீர் என முழக்கங்கள் எழுப்பியவாறே நம்புங்கள் தமிழீழம் பாடலோடு இன்றைய அறவழிப்போராட்டம் நிறைவு பெற்றது.
எம் அன்பான தமிழீழ உறவுகளே நாம் அனைவரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் வடுக்களை சுமந்து கொண்டே வாழ்கின்றோம். அவ்விழப்புக்களை சாட்சியங்களாக சமர்பித்தலின் மூலம் நிச்சயம் சர்வதேச மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் தமிழீழ சுதந்திர தேசத்தினை நாம் விரைவாக மீட்டெடுக்க முடியும். எனவே உங்கள் வாழிட நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக சாட்சியங்களை சமர்ப்பிக்க தவறாதீர்கள்.