நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்களின் படுகொலை நிகழ்வு
நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சில் பலியான மாணவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் பிற்பகல் தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம், மலர் மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் விமானப்படையின் புக்காரா விமானத்தால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 21 மாணவர்கள் பலியாகினர். பலர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். பொது மக்களும் 18 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.