November 22, 2024

கோயில் கட்டுவோம்:உடலங்கள் அநாதையாக?

வடமாகாணத்தில் கடந்த இருவாரத்தினுள் உயிரிழந்த 95 பொதுமக்களது உடலங்கள் மயானங்களில் நிலவும் நெருக்கடியால்  வெளி மாகாணங்களில் மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் இதுவரை தொற்று காரணமாக 685 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய தொற்று உறுதிசெய்யப்பட்ட உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டுமாயின் மின் தகன சாலையிலேயே தகனம் செய்ய முடியும்.

வடமாகாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாணம் மாநகர சபையிலும், வவுனியா நகர சபையிலும் என இரண்டு மின்தகன சாலைகள் மட்டுமே காணப்படுகின்றன.

இவற்றில் ஒரு நாளைக்கு ஆகக்கூடியது 11 உடலங்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். ஆனால் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியின் பின்னர் இறப்புக்களில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் மின் தகனத்திற்காக உடலங்கள் பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செப்ரெம்பர் மாதம் 3ம் திகதிய நிலவரப்படி 54 உடலங்கள் மின் தகனத்திற்காக வடமாகாணத்தில் தேங்கியிருந்தன. இந்த உடலங்களை உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறையில் பேணுவதற்குரிய குளிரூட்டி வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்ததால் பெரும் நெருக்கடிகள் எதிர்நோக்கப்பட்டிருந்தது.

எனவே மாகாணத்திற்கு வெளியே உள்ள மின் தகன சாலைகளுக்கு உடலங்களை அனுப்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எமது வேண்டுகோளிற்கு அமைவாக வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த உடலங்களை மின்தகனம் செய்வதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது.

அதன் அடிப்படையில் செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் இன்று வரை 95 உடலங்கள் மேற்படி மாகாணங்களில் மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவென தெரிவித்தார்.