November 22, 2024

பட்டமளிப்பு நிழக்வை நிராகரிக்கின்றோம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை  முழுமையாக நிராகரிக்கின்றோமென, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று (20) வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா – பகுதி இரண்டானது, செப்டெம்பர் 16, 17, 18ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் எனினும், ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7, 8, 9ஆம் திகதிகளில் நடத்துவதெனத் தெரிவிக்கப்பட்டு, பிற்போடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்து, பட்டமளிப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஒன்றியம், இந்நிலையில், இந்நிகழ்வை ஒக்டோபர் 7ஆம் திகதி நிகழ்நிலையில் நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் சாடியுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஒன்றியம், இது தொடர்பாக செப்டெம்பர் 15ஆம் திகதியன்று துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தாங்கள் தெரிவித்திருந்ததாகவும் எனினும், துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் தமக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

‚நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் ஆகும்.

எனவே, பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல், நேரடியாக மாணவர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்துமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தை கோருகின்றோம்‘ எனவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.