இலங்கை:அரிசிக்கும் பஞ்சம்!
தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது எதிர்வரும் ஓரிரு தினங்களில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் சுமார் 3 இலட்சம் தொன் அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,அரிசிக்கான சில்லறை விலை 98 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் , எந்தவொரு விற்பனை நிலையங்களிலும் அந்த விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை.
அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகலவினால் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பலருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் முப்படை தளபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? இவ்வாறான செயற்பாடுகள் மூலமோ அல்லது அவசரகால விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலமோ அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்