சர்வதேசத்திற்கு மிரளும் கோத்தா!
சர்வதேசத்தை கையாள கோத்தா அரசு மும்முரமாக காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது.
சீனா சார்பு கோத்தா அரசு என்ற சாயத்தை தவிர்த்து இந்திய ஆதரவை பெற மிலிந்த மொறகொடவை நியமித்ததுடன் வெளிவிவகார அமைச்சராக பிரீஸை நியமித்ததுடன் தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவை, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பொறுப்பை விரைவில் ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, அவர் கோத்தபாயவின் பணிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க விஜயத்தை ஆரம்பிப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மஹிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும், அமெரிக்க தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் பிரச்சினைகளில் இலங்கை தற்போது கடுமையான சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த விவகாரங்களின் மையமாக அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.
எனவே, அமெரிக்காவை கையாள அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவையென்ற அடிப்படையில், கோட்டாபய இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் அமெரிக்க தூதுவர் ரவிநாத ஆர்யசிங்கவின் ஓய்வு அறிவிப்பு வெளியான நிலையில், அந்த பதவியை ஏற்க மஹிந்த சமரசிங்க தான் சரியான நபர் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பல சமயங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பாக அவர் செயற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அமெரிக்காவை கையாள அவர் பொருத்தமானவர் என அரசு கருதியுள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, மஹிந்த சமரசிங்க பதவிவிலக முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.