November 22, 2024

கொழும்பில் மக்களிடையே சுனாமி அச்சம் -பொலிஸார் விடுத்த அவசர அறிவிப்பு

இந்தநிலையில் கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, கடல் அலை சுமார் 2 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீற்றம் பெறும் கடல் அலையானது, கரைக்குள் வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது. கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் அங்குலானை பகுதியில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். கடல் சற்று சீற்றம் அதிகரித்து காணப்படும் என தமக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

எனினும், சுனாமி ஏற்படும் என கூறப்படும் செய்தி போலியானது எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், சுனாமி ஏற்படுவதாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையிலேயே, பொலிஸார் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்