அனுப்பவில்லை: அனுப்பினேன் – தமிழரசு பரிதாபங்கள்!
விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்க சொல்லி தமிழரசுக்கட்சி பேரில் ஜநாவிற்கு மகஜர் அனுப்பப்படவில்லையென எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜநா ஆணையாளருக்கு தானும் கடிதமெழுதியதாக ச.சிறீதரன் போட்டியாக கிளிநொச்சியில் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஒரு இலட்சத்து 46ஆயிரத்து 745பேர் காணாமல் போயிருந்ததாக தெரிவித்தனர்.ஜநாவால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழுவோ 70ஆயிரம் பேர் காணாமல் போனமை பற்றி கூறுகின்றது.
ஆனால் இலங்கை அரசின் காணாமல் போனோர் அலுவலகமோ வெறும் 14ஆயிரத்து 988பேரே காணாமல் போயிருப்பதாக மூடிமறைக்கப்படுவதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் .
அவருடைய ஊடக சந்திப்பு இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகமான அறிவகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி உட்பட வன்னியில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் பற்றிய விபரங்களை பகிர்ந்துள்ள அவர் அரசு சர்வதேசத்திற்கு பகிரங்கமாக பொய் சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றங்களையும் விசாரிக்க கோரும் கொழும்பு மைய தொண்டு நிறுவன ஆய்வறிக்கையினை முன்னிலைப்படுத்தி எம்.ஏ.சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இரா.சம்பந்தரது ஒப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளமை தெரிந்ததே.