தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – பீலபெல்ட்
அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து செல்லும் காலமானபோதும் தொடர்ந்தும் துடிப்போடு செயலாற்றும் கழகமாகத் தமிழ்க் கல்விக் கழகம் இந்த ஆண்டும் தன்னைப் பதிவு செய்தமை சிறப்பாகும்.5,10,15ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோருக்குப் பட்டயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு, 31ஆவது அகவை நிறைவுவிழா அரங்கிலே ஆறுக்கு மேற்பட்டோர் 20ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர் தமிழ்வாரிதி, என்ற பட்டமளிப்பையும், 25ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர் தமிழ்மாணி, என்ற பட்டமளிப்பையும் பெற, 30ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்காக மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட சிறப்புப் பதக்கம் அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மதிப்புளிப்புகளைப் பெறவந்த ஆசான்களை அவர்கள் பணியாற்றும் தமிழாலய உறவுகள் புடைசூழ்ந்து சிறப்பாக அழைத்துவந்து அரங்கிலே இணைந்தமை அவர்களது அயராத பணிக்கான பெரும் அங்கீகாரமாகக் காட்சியளித்ததோடு, அவர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் பணியாற்றுவதற்கான ஊக்கியாகவும் அமைந்தது. இந்த அரங்கிலே முப்பது ஆண்டுகள் பணியாற்றியமைக்கான பதக்கத்தைப் பெற்ற பெண் செயற்பாட்டாளரே, யேர்மன் தழுவியமட்டத்தில் முதலாவது பெண் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழாலயத்திலே இணைந்தது முதல் 12ஆம் ஆண்டுவரை தமிழ்மொழி கற்று நிறைவுசெய்தோருக்குச் செம்பகத்தின் வண்ணம் கொண்ட சிறப்பு ஆடை அணிவிக்கப்பட்டு அரங்கிற்கு அழைத்துவரப்பட்டுச் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர். கவிதை, சிறப்புரை, வாழ்த்துரை விடுதலை நடனங்கள் மற்றும் பாடல்கள் அரங்கைச் சிறப்பித்து நகர்ந்து செல்ல, நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற தமிழினத்தின் இலட்சியத் தாகம்மிகு பாடலுடன் எழுச்சி பொங்க நிறைவுற்றது.