சொத்து தேவையில்லை! ஜப்பான் நாட்டு இளவரசியின் அதிரடி முடிவு!
இளவரசி மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்றபோது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். ஆனால், அதனை பொருட்படுத்தாது, காதலுக்காக அவர் அரச பட்டத்தை இழக்கவும் துணிந்தார். அதேசமயம், கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர்களது திருமணம் தள்ளிப் போனது.
தொடர்ந்து, இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதன்முடிவுகள் வந்தபின்னர் அவர் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதனால், இளவரசி மகோவும் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.
இதனிடையே, மகோவின் தந்தையும் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், ஆனால் மகோ பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, இந்தாண்டு இறுதிக்குள் தங்களது திருமணத்தை அவர்கள் சாதாரண முறைப்படி நடத்தவுள்ளனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச குடும்பத்தை விட்டு செல்லும் பெண், அரச பட்டத்தை இழப்பதுடன் அவருக்கு இழப்பீடும் வழங்கப்படும். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் தரப்படும் அந்த தொகை தனக்கு வேண்டாம் என்று மகோ தெரிவித்து விட்டார். அவர் வேண்டாம் என்று சொன்ன தொகை சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.