வடக்கில் சுடலைகளில் நெருக்கடி!
வடக்கில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் மின்தகன மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வவுனியா – பூந்தோட்டம் மயானத்தில் உள்ள மின் தகன இயந்திரம் பழுதடைந்துள்ளமையால், கொரோனா சடலங்கள் எரியூட்டப்படாமல் தேங்கும் நிலை காணப்படுவதாக, வவுனியா நாகரசபை தவிசாளர் இ. கௌதமன் தெரிவித்துள்ளார்..
நேற்று திங்கட்கிழமை காலை மயானத்தில் உள்ள மின்தகன இயந்திரம் செயலிழந்துள்ளது. ‚ஒருநாள் எமது மயானம் இயங்காது விடும் பட்சத்தில், சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போய்விடுமெனவும் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மன்னார் மாவட்டத்தில், கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், சடலங்களை வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்துக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.
முன் அனுமதியின்றி சடலங்களை வவுனியா தகன நிலையத்துக்கு கொண்டு வர வேண்டாமென தங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்த மாவட்ட செயலர், இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில், உடனடியாக மின் தகன நிலையத்தை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்;.
இதனிடையே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் மரணிப்போரது சடலங்கள், கோம்பயன் மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படுகின்றது.
அங்கு நாளொன்றிற்கு ஜந்து வரை உடலங்களை தகனம் செய்யக்கூடிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் 11 உடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அறிவி;க்கப்பட்டுள்ளது.