வானோடிக்கு நெஞ்சுவலி! அவசரமாக தரையிறக்கப்பட்ட வானூர்தி
மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு பறந்து சென்ற வானூர்தியில் வானோடிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.போயிங் ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தியில் 126 பயணிகள் இருந்துள்ளனர். மஸ்கட்டிலிருந்து டாக்கா சென்றபோது, இந்திய வான்வெளி எல்லையில் வானூர்தி சென்றபோது, திடீரென வானோடிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வானோடிகள் குழு விமான கட்டுப்பாட்டு அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர்.
ராய்ப்பூர் அருகே வானூர்தி பறந்தபோது இவ்வாறு தொடர்பு கொண்டுள்ளனர் வானோடிகள். கொல்கத்தா வானூர்தி நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதைவிட அருகேயுள்ளது நாக்பூர் வானூர்தி நிலையம் என்பதால் அங்கே தரையிறங்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனவே காலை 11.40 மணியளவில் வானூர்தி, நாக்பூரில் தரையிறங்கியுள்ளது. இதையடுத்து உள்ளூர் மருத்துவமனையொன்றில் வானோடி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.