சம்பள வெட்டு இல்லையாம்: தியாகத்திற்கு கோத்தா அழைப்பு!
இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று கோத்தா அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.
அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுகையில், ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை முடிவு அரச துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்று இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறினார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஒகஸ்ட் மாத சம்பளத்தை நிதிக்கு வழங்க அமைச்சரவை நேற்று முடிவு செய்திருந்தது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு அரச துறையிலோ அல்லது தனியார் துறையிலோ கூட ஊதியக் குறைப்புக்கான முயற்சியாகும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அழகப்பெரும கூறினார்.
எனினும் அடுத்த மாதம் சம்பளத்தின் அரைப்பங்கை வழங்க திட்டமிட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோத்தா தியாகங்கள் புரிய தயார் ஆகுமாறு அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.