November 24, 2024

எனது காலணியைக்கூட எடுக்க முடியாத சூழலில் வெளியேற்றப்பட்டேன் – அஷ்ரப் கனி

எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்தார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கம் மூலம் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அஷ்ரப் கனி கூறியதாவது, எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத்தெரியாவதவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர். நான் வெளியேற்றப்பட்டேன்.

இந்த நிகழ்வுகள் மிகவும் வேகமாக நடைபெற்றுவிட்டது. தலீபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன்.

அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தலீபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்’ என்றார்.

அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. அதனை அவர் மறுத்துள்ளார்.