தலைமன்னாரில் வீடுகளுக்குள் புகுந்து பொலிஸார் அடாவடி
தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மது போதையில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் வீட்டை உடைத்து சேதப்படுத்தி அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்கள் ஒன்றிணைந்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
தலைமன்னாரில் பல வீடுகளுக்கு சிவில் உடையில் சென்று பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இன்று வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மது போதையில் சிவில் உடையில் சென்று வீடுகளில் உள்ளவர்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடொன்றை சேதப்படுத்தியுள்ள பொலிஸார், மேலும் 6 வீடுகளுக்குச் சென்று வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி தலைமன்னார் கிராம பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கத்தை தொடர்ந்து தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒரு தரப்பினர் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து சமரசரம் செய்துவைப்பதாக தெரிவித்து, இரு தரப்பினரையும் அழைத்து பொலிஸார் ஒரு தரப்பிடம் இலஞ்சத்தை பெற்று அவர்களுக்கு சார்பாக நடந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.