November 23, 2024

இலங்கையில் ஈக்களைப் போல் இறந்து மடியும் மக்கள்

மக்கள் ஈக்களைப் போல் இறந்து மடிகிறார்கள் என்று முகநூலில் எழுதிக் கொண்டிருக்காமல் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை வைத்தியசாலையின் கொரோனா நிலைமை குறித்து சமூக வலைத்தளத்தில் நஜித் இந்திக்க என்ற மருத்துவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன,

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க முகநூலில் மரண அவலம் குறித்து எழுதுகிறார். அவர் முகநூலில் எழுதுவதை விடுத்து வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

முகநூலில் கொரோனா நோயாளர்களை குணப்படுத்த முடியாது. இன்று இதுவொரு அலையாக மாறிவிட்டது.

முகநூலில் வந்து அங்கு அத்தனை பேர் இங்கு இத்தனை பேர் இறக்கின்றனர். பாதிக்கப்படுகின்றனர் என்று எழுதுகின்றனர். இதன்மூலம் நாட்டை அழிக்கவே பார்க்கின்றனர் என்றார்.

இதேவேளை, அவிசாவளை வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் ஈக்களைப் போன்று செத்து மடிவதாக வைத்தியர் நஜித் இந்திக அண்மையில் முகநூல் வழியாக கூறியதை அடுத்து அவரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை முன்னெடுத்திருந்தனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.