போராடாமலே சரணடைந்தவர்களை நம்பி எங்கள் இராணுவத்தினரை இழக்க முடியாது – ஜோ பைடன்
தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் இராணுவம் போராடாமலே சரணடைந்தனரை அந்த இராணுவத்தையும், அரசாங்கத்தையும் நம்பி எங்களது அமெரிக்க இராணுவத்தினரை இழக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில்
ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்பினரை மீட்டுக்கொள்ள எடுத்திருக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாய், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் காரணமாக பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் சென்றது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்காக அங்கு செல்லவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு உள்ளதால், அமெரிக்க இராணுவம் வெளியேற முடிவு செய்தது. அமெரிக்க இராணுவம் வெளியேறுவதற்கு இதை விட உகந்த சூழல் இருக்காது.
தலிபான்களை ஒடுக்க ஆப்கான் இராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்தது. ஆனால் ஆப்கன் இராணுவத்தினர் போராடாமலேயே சரணடைந்து விட்டது. ஆப்கான் அரசியல் தலைவர்களிடம் ஒற்றுமை இன்மையே தலிபான்களின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆப்கான் அரசியல்வாதிகள் நாட்டை கைவிட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.
ஆப்கானில் இருந்து அமெரிக்க இராணுவத்தை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருக்கிறோம். எதிர்பார்த்ததை விட தலிபான்கள் வேகமாக ஆப்கனை கைப்பற்றி விட்டனர். காபூலில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானில் உள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள அமெரிக்கர்களை தாக்கினால் தலீபான்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆப்கான் மக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என்றார்.