November 24, 2024

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – டொமினிக் ராப்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில்  தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அணுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உன்னிப்பான கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான  சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுடைய செயற்பாட்டிற்கான நிதி தடையின்றி கிடைப்பதையும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகமாக ஒதுக்கப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை திரட்டுதல் மற்றும் பாதுகாத்தல் செயற்பாட்டுக்காக 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும், அச்செயற்பாட்டிற்கான நிதியை கூடுதலாக அளிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலாவாய அபிவிருத்தி இராஜாங்க அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்திற்கு அளித்துள்ள பதிலிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்ப்பட்ட 46/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி விடயம்  சார்ந்து தாங்கள் கடந்த ஜுன் 24ஆம் திகதி எனக்கு கிடைக்கப்பெற்றது. அதனை தமிழர்களின் சார்பில் எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தி வருகின்றேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பிலான 46/1 தீர்மானத்தினை நிறைவேற்றியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆழ்ந்த கரிசனைகளை செலுத்தி வந்து கொண்டிருக்கின்றேன். அத்துடன் அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை முழுமையாக ஊக்குவிப்பதோடு ஆதரித்தும் வந்திருக்கின்றேன்.

மிக அண்மையில் அதாவது மே 10ஆம் திகதி இலங்கையில் உள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகருடனும் ஜுன் 17ஆம் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடனும் ஐ.நா.தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான எனது கரிசனையை மிகவும் ஆழமாக வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கான நிதி பற்றிய விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். அதற்காக முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த ஜுன் ஆறாம் திகதி எனது அலுவலகர்கள் ஜெனிவாவிலும், நியூயோக்கிலும் இந்த விடயம் சம்பந்தமாக செயற்படுவதற்காக ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் வரவுசெலவுத்திட்ட கேள்விகள் மற்றும் நிருவாகத்திற்கான ஆலோசனைக் குழுவானது 2021ஆம் ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதித்தொகைக்கு தனது இணக்கத்தினை வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் ஆரம்பகட்டத்தில் குறிக்கப்பட்டிருந்த தொகையை விடவும் நிதி குறைக்கப்பட்டிருந்தமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இருப்பினும், அதன்காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஆரம்பகட்டச் செயற்பாடுகளின் வினைத்திறனில் குறைவான நிலைமைகள் காணப்படவில்லை. அவை முன்னேற்றகரமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகரத்திற்கான வரவு செலவுத்திட்டத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களைச் செய்வோம். மேலதிகமான நிதி மூலங்களிலிருந்து மேலும் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைளை முன்னெடுப்போம். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் பற்றி தொடர்ச்சியாக கண்காணிப்புடன் இருக்கவுள்ளதோடு அதற்கான ஒத்துழைப்புக்களையும், ஊக்குவிப்பினையும் வழங்கவுள்ளோம் என்றுள்ளது.