November 24, 2024

சிங்கம் சிங்கிளாக சுடரேற்றி அஞ்சலித்தது!

வன்னியில் கமராக்கள் முன்னால் விளக்கேற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செல்பி பிள்ளைகள் முடங்கிவிட செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் சுடரேற்றி அஞ்சலித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இராணுவம் இலங்கை காவல்துறை குவிந்திருக்க படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் அம்மன் ஆலயத்திற்கு அருகாக உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

குறித்த அஞ்சலிக்கு பொலிஸார்,  இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு  அஞ்சலி செலுத்தினார்.

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர்.