November 23, 2024

இலங்கையில் திருமணம் செய்தவர்கள் வௌிநாட்டில் விவாகரத்து செய்ய சட்டமுலம்

இலங்கையில் திருமணம் செய்தவர்கள் வௌிநாட்டில் விவாகரத்து செய்ய சட்டமுலம்

இலங்கையில் திருமணம் செய்தவர்களின் வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்து அல்லது சட்ட ரீதியான திருமண முறிவுகளை இலங்கையில் ஏற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும் விவாகரத்து, திருமணத்தை இரத்து செய்தல் மற்றும் நீதித்துறை ஊடாக பிரித்தல் ஆகியவற்றை அனுமதிப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள நீதி அமைச்சு தயாராகியுள்ளது.

இலங்கையில் திருமணம் செய்து பின்னர் வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் திருமண வழக்குகளைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் தீர்ப்புக்களை இலங்கையில் அங்கீகரிக்காமையால், அவ்வாறானவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எமது நாட்டில் அவ்வாறான வழக்குத் தீர்ப்புக்களுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாயின் அவர்கள் மீண்டும் இலங்கையில் விவாகரத்து வழக்குத் தொடர வேண்டியுள்ளது.

அதனால், வெளிநாடுகள் இடம்பெறும் விவாகரத்துக்கள், மண நீக்கங்கள் மற்றும் சட்ட ரீதியான திருமண முறிவுகளை அங்கீகரிக்கக் கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகளை வகுத்தல் பொருத்தமானதென நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குடும்பச் சட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

விவாகரத்து

அதற்கமைய, வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்துக்கள், மண நீக்கம் மற்றும் சட்ட ரீதியான திருமண முறிவுகளை எமது நாட்டில் அங்கீகரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு இயலுமான வகையில் சட்ட மூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.