November 23, 2024

சிவப்பு துண்டு தொண்டர்களுடன் கொடியேற்றம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் ஆலய தொண்டர்கள் மற்றும் குருமார் மட்டும் பங்கெடுப்புடன்  வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய நிலையே நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே பக்தர்களிற்கு இலவச நேரடி அஞ்சல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்கள் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படாமையால் தடுத்து நின்ற பொலிஸார் முன்னிலையில் வீதியில் தேங்காய் உடைத்து,  கற்பூரம் கொளுத்தி , மலர் தூவி வணங்கிச்சென்றனர்.

நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு, நல்லூரானை வணங்கி செல்ல வந்த பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க பொலிஸார் மறுத்தமையால் , வீதியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை, பொலிஸாருக்கு முன்பாக  வீதியில் உடைத்து , வீதியில் கற்பூரம் கொளுத்தி , நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி , வீதியிலேயே விழுந்து வணங்கி சென்றனர்.