‘திமுக மக்களை நன்றாக ஏமாற்றிவிட்டது’ – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஊதாரித்தனமான முன்னாள் அரசு என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது –
பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேசும் ஸ்டாலின், நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் அத்துமீறி லஞ்ச ஒழிப்புத்துறை ஏவி இருக்கிறார்.
பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை நன்றாக ஏமாற்றியுள்ளது.
வெள்ளை அறிக்கையின் போது உண்மைக்கு புறம்பான தகவலை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். வாக்குறுதி அளித்துவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை போடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். பொய் வழக்குகளை கண்டு அதிமுக என்றும் அஞ்சாது.
இவ்வாறு அவர் பேசினார்.