திறப்பதா? மூடுவதா அரசுக்குள் குழப்பம்!
நாடு முடக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டை முடக்குவது முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்றும் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த குறுகிய முடக்கம் மற்றும் பிற கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
சுகாதார சேவைப்பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் நாட்டில் முடக்கலை அமல்படுத்துவது சிறந்தது ஒன்றாகும் என்று கூறினார். இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால் முடக்கலை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குகிறது.