கொரோனா ஒருபுறம்: ஆர்ப்பாட்டம் மறுபுறம்?
சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராக இன்று காலை 11 மணிக்கு யாழ். பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கமாகவே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சம்பள உயர்வை கேட்கவில்லை எமது சம்பளத்தையே கேட்கிறோம், பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்து, ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்துவை, இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே, இருபத்து நான்கு வருட ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்கு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இடம்பெற்றது.
முன்னதாக பருத்தித்துறை நகரிலிருந்து பேரணியாக ஆரம்பமாகிய போராட்டம் பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதியால் பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடைந்து போராட்டம் நிறைவுற்றது.
இதில் வடமராட்சி வலய ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கத்தை சேர்ந்த பதின்னான்கு சங்கங்களின் பிரதிநிதிகள் என சுமார் நூறுபேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.