சீனாவை விட்டால் இலங்கைக்கு வேறு வழி இல்லை!
சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடன் பெறமுடியாத நிலைமைதான் இலங்கைக்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டுக் கொள்கைகள் மாறினாலும் வேறு நாட்டின் கொள்கைக்கு அமைய நாம் செயற்பட முடியாது. எமது நாட்டை அவ்வாறானதொரு இடமாக மற்றைய நாடுகள் கையாள முடியாது.
அடையாளங்களையும் தனித்துவத்தையும் பாதுகாத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைதான் உள்ளது.
சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடன் பெறமுடியாத நிலைமைதான் காணப்படுகின்றது.
மேலும், இந்தியா என்பது வரலாற்று ரீதியான விசேட தொடர்பைக் கொண்ட நாடாகக் காணப்படுகின்றது.
சீனா மற்றும் இந்தியா தென்னாசியப் பிராந்தியத்தியத்தின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கின்ற இரண்டு நாடுகளாகும். இந்த உறவை யாரும் முறியடிக்க முடியாது.
இந்தியாவினால் இலங்கையின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை விடுத்து,
நாம் செயற்படுகின்ற சந்தர்ப்பத்திலே நமது முன்னேற்றம் சாத்தியமாகும்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு இந்தியா எமது நாட்டுக்குத் தேவையான தகவல்களை வழங்கியிருந்தது. இருப்பினும் எமக்கு அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதுதான் பிரச்சினையாக அமைந்திருந்தது.
அதனை விடுத்து ஏனைய நாடுகளுடனும் தொடர்புகளைப் பேணலாம் அதில் எந்த பிரச்சினையும் கிடையாது.
இரண்டாம் உலகப்போரில் நாங்கள் சீனாவுடன் இருந்தோம். சமாதான உடன்படிக்கையில் நாம் ஜப்பானுடன் இருந்தோம் என்றார்.