எதிர்வரும் திங்கட்கிழமை வாகனப் பேரணிக்கு அழைப்பு!!
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவ சட்ட மூலத்தை நீக்க கோரியும் எதிர்வரும் திங்கட்கிழமை யாழில் மாபெரும் வாகனப் பேரணியொன்று நடாத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ் ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அச்சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மைக்காலமாக ஆசிரியர் அவருடைய சம்பள முரண்பாடு தொடர்பாகவும் திராவிட தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பாகவும் நாட்டில் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் கொத்தலாவ சட்ட மூலத்திற்கு எதிராகவும் மற்றும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரியும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திலும் மாபெரும் தொடர் வாகனப் பேரணியொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்பாக இந்த வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு யாழ் மாவட்டச் செயலகம் வரை சென்று நிறைவடைய உள்ளது.
ஆகையினால் வடக்கு மாகாணத்திலுள்ள அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த பேரணிக்கு முழுமையான ஆதரவை வழங்கி பேரணியில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றோம்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தி நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும் இதற்கு சரியான தீர்வு இன்று வரையில் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் ஆட்சி பீடத்திற்கு வருவதற்கு முன்னர் இதற்கான தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் இதுவரையில் தீர்வை வழங்கவே இல்லை. இதனாலேயே தொடர்ந்தும் போராட்டங்களை நடாத்தியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் வந்திருந்தோம்.
ஆயினும் இந்த அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் எவையும் இதுவரைக்கும் எந்த விதமான தீர்வையும் வழங்காததால் நாம் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதனடிப்படையிலையே இந்த மாபெரும் வாகனப் பேரணியொன்றை நடாத்த தீர்மானித்துள்ளோம்.
எனவே வடக்கிலுள்ள அதிபர் ஆசிரியர்கள் இந்தப் பேரணிக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென்றும் மீண்டும் கோருகின்றோம் என்றார்.