10 ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலையை அம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை !
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிடுகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை மோசமாகி தற்போது ஒட்டு மொத்த கடன் ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. எனவே அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதன்படி, கடந்த 10 ஆண்டு நிதி நிலைமை பற்றி, 120 பக்க வெள்ளையறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரும் 9-ந் தேதி வெளியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு இருக்கும் கடன் விவரங்கள், வருவாய் இழப்புகள், அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்த வெள்ளையறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு திமுக அரசின் இந்த வெள்ளை அறிக்கை கடும் நெருக்கடியைத்தரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருகிறார்கள்.
பொது பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து, ஆக. 13-ந் தேதி தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட் தொடர்பாக, தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், இந்த ஆண்டு முதல் முறையாக தாக்கலாகும் வேளாண் பட்ஜெட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டதால் அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தது. தற்போது தி.மு.க. அரசு முழுமையான பட்ஜெட்டை தயாரித்துள்ளது.
அதுமட்டுமின்றி வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து அதற்காக திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.
பொது பட்ஜெட்டிலும், வேளாண்மைத்துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைவாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டசபையில் வருகிற 13-ந்தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.