November 23, 2024

சமரசமில்லை:நீதி கோரி போராட்டம் தொடரும்!

இலங்கை அரசும் அதனது முகவர்களும் நீதி கோரி தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களது போராட்டங்களை அற்ப சொற்ப சலுகைகளிற்காக கூறுபோட்டு விற்க முற்படுகின்றனர்.ஆனாலும் நீதிகோரிய எமது போராட்டம் எந்தவித சமரசமுமின்றி நீதி கிடைக்கப்பெறும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அதன் பிரதிநிதிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பபடும் எமது போராட்டத்தை சலுகைகளை காண்பித்து கவிழ்த்து விட ஆட்சியாளர்களது நிகழ்ச்சி நிரலில் சிலர் முற்பட்டுள்ளனர்.

அதே போன்று அரசியல் கட்சிகளை சார்ந்த சிலரும் இத்தகைய போராட்டத்தை சிதைக்கும் நடவடிக்கைகளில் குதித்துள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நிவாரணப்பொதிகளை கொரோனா காலத்தில் வழங்கி எம்மை போன்றவர்களை ஏமாளிகளாக்கிவிட அவர்கள் முற்பட்டுள்ளனர்.

எமக்கான நீதி சர்வதேசத்திடமிருந்து கிடைக்கும் வரை நாங்கள் பின்வாங்கப்போவதில்லையென தெரிவித்த அவர்கள் அது வரை போராட்டம் தொடருமெனவும் தெரிவித்தனர்.

இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவகத்தை நாம் நிராகரித்தமை சரியானதென்பது உறுதியாகிவருவதாகவும் தெரிவித்த அவர்கள் அவ்வலுவலத்திற்கு கோத்தா அரசு சம்பளத்தை வழங்குவதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாக சர்வதேசத்திற்கு காண்பிக்க முற்படுவதாகவும் தெரிவித்தனர்.

தற்போதைய கொரோனா சூழலால் தமது போராட்டத்தை மட்டுப்படுத்தியிருப்பதாக தெரிவித்த அவர்கள் நீதி கோரிய தமது போராட்டம் எந்தவித சமரசமுமின்றி முன்னெடுக்கப்படுவததாகவும் தெரிவித்தனர்.