றிசாட்டை முன்னிறுத்தி தெற்கில் அரசியல்!
ரிஷாட் பதியூதீனை அரசியல் ரீதியாக இலக்கு வைக்கும் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சியில் இருந்து ஏன் இடைநிறுத்தப்படவில்லை என்று டிலான் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
சிறுமி ஹிஷாலினி மரணம் விவகாரத்தில் எதிர்க்கட்சியினரும், மலையக அரசியல்வாதிகளும் இரட்டைவேடம் போடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரிஷாட் பதியுதீன் எம்.பியை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இடை நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்றுஇடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“சிறுமியின் மரணத்தை தொடர்ந்து பல விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ரிஷாட் பதியுதீனின் தரப்பினருக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிடும் நிலையில், அவ்வாறான எவ்விதத் தொடர்பும் கிடையாது.
பொறுப்பான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து தற்காலிகமாவேனும் நிறுத்த வேண்டும்.
எனினும், இந்த விடயத்தில் எதிர்க்கட்சியினரும், எதிர்த்தரப்பில் உள்ள மலையக அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் போடுகிறார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.