கல்வியை இராணுவ மயமாக்குவதற்கு எதிராக யாழில் போராட்டம்!
உயர்கல்வியினை இராணுவமயமாக்கும் வகையிலும், தனியார்மயமாக்கும் வகையிலும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலம் மற்றும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் ஆகியவற்றினை எதிர்க்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் கல்வியினை இராணுவமயமாக்குவதற்கு எதிரான மக்கள் இயக்கம்
தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றது.
இந்த இயக்கத்திலே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் உள்ளடங்கலாக கல்வி, உயர்கல்வித் துறையினைச் சார்ந்த பல தொழிற்சங்களும், வேறு சிவில் சமூக மற்றும் மக்கள் அமைப்புக்களும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் தனக்குள்ள கூடுதல் பெரும்பான்மை பலத்தினைப் பிரயோகித்து இந்தச் சட்டத்தினை நிறைவேற்ற முற்படுவதனை எதிர்ப்பது கல்வியினை இராணுவமயமாக்குவதற்கும், தனியார்மயமாக்குவதற்கும் எதிரான தரப்புக்களின் வரலாற்றுக் கடமையாகும்.
எமது நாட்டின் இலவசக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை என்பன கூடுதல் ஜனநாயகத் தன்மை பெறுவதனை நாம் விரும்புவோமாயின் கல்வித் துறையில் இடம்பெறும் தனியார்மயமாக்கல், இராணுவமயமாக்கல்ஆகியவற்றுடன், எமது பல்கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் இடம்பெறும் அரசியற்
தலையீடுகளையும் நாம் எதிர்க்க வேண்டும். அரச செலவுகளைத் தீர்மானிக்கையில் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படல் வேண்டும். கல்விச் சாலைகளிலே பணிபுரியும் யாவரும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற வகையில், கௌரவத்துடன் தமது சேவைகளை வழங்குவதற்கான வெளிகள் இருப்பதனை நாம் உறுதி செய்ய வேண்டும். உட்கட்டுமான வசதிகளும், மனித வளங்களும் அதிகரிக்கப்பட்டு, ஏற்கனவே இருக்கும் இலவசக்
கல்விச் சூழல் மேலும் விரிவாக்கப்பட்டு, ஜனநாயகமயப்பட வேண்டும்.
இவ்வாறான ஒரு பரந்து பட்ட வகையில், எமது நாட்டின் இலவசக் கல்வி மேலும் ஜனநாயகமயமாக்கப்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவாறு, நாடாளாவிய ரீதியில் கல்வியினை இராணுவமயமாக்குவதற்கு எதிரான மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் போராட்டங்களிலே ஒரு பகுதியாக நாளை (புதன்கிழமை) 04 ஓகஸ்ட் 2021 அன்று நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை ஒரு அமைதிப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலின் வெளியிலே,
இராமநாதன் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறும். இந்தப் போராட்டம் நாட்டில் அமுலில் இருக்கும் கோவிட் 19 நெறிமுறைகளுக்கு அமையவே இடம்பெறும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரினை உள்ளடக்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரின் அழைப்பில் இடம்பெறும் இந்தப்
போராட்டத்திற்கு, இலங்கை ஆசிரியர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, வல்லமை, புதிய அதிபர் சங்கம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் ஏற்கனவே தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
இலவசக் கல்வி சமூகத்துக்குரிய ஒரு விடயம். அது சமூகத்திலும், அரசிலும் ஜனநாயகத்தின் இருப்பினை உறுதி செய்ய அவசியமானது. இராணுவமயமாக்கம், தனியார்மயமாக்கம், அரசியற் தலையீடுகள் இலவசக் கல்வியின் நீதியின் பாற்பட்டதும், ஜனநாயகத்தின் பாற்பட்டதுமான இலக்குகளை நிர்மூலமாக்கி விடும்.
இந்த அபாயகரமான கட்டத்தினை நோக்கி எமது கல்வித் துறையினைத் தள்ளுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்க்க கல்வித் துறையினைச் சேர்ந்தோரினையும், தொழிற்சங்கங்களையும், சிவில் அமைப்புக்களையும், பொதுமக்களையும் நாளை இடம்பெறவிருக்கும் போராட்டத்திலே ஒன்றிணைந்து பங்கேற்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினர் அழைக்கின்றனர்.
ஊடக அறிக்கையினை இணைந்து வெளியிடுவோர்:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்