மேற்கு தொடர்ச்சி மலையில் அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை தடுக்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கனிமவள கொள்ளை அரங்கேறி வருகிறது. குறிப்பாக, நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட லாரிகளில், கல், ஜல்லி, பாறை,செயற்கை மணல் ஆகியவற்றை கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கனிமவளத் துறையிடம் இருந்து கேரளாவுக்கு 50 லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்வதாக அனுமதி பெற்றுவிட்டு, 600-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. அதோடு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 8 யூனிட் வரை லாரிகளில் கனிமவள ஏற்றி செல்லப்படுகிறது.
கனிமவளச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின்படி குமரியில் சிறு குன்றுகளில் கூட கற்களை உடைக்க முடியாது. ஆனால், விதிமுறைக்கு புறம்பாக, கனிமவள கொள்ளை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் நடைபெற்று வருவது வேதனையானது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பாறைகளை உடைக்க அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதோடு, வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகள், அரிய வகை பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. குமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அழிக்கப்படுவதால், தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதி பெற்று சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் இதுவரை அரங்கேறிய கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி, சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், பத்திரிகையாளர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.