November 22, 2024

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை

குறித்த கிராம அலுவலர் பிரிவில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாழ்வுபாடு கிராமத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை 35 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தாழ்வுபாடு கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவை தற்காலிகமாக தனிமைப் படுத்தும் வகையில் வேண்டுகோள் ஒன்று கொழும்பு கொவிட்-19 தடுப்பு செயலனியிடம் முன் வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகரன் தெரிவித்தார்.

-மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை (31) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 1200 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் மாதிரிகள் கொழும்பு முல்லேரியா வைத்தியசாலை ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு கட்டம் கட்டமாக பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப் பெற்று வருகிறது.

-இவற்றில் முக்கியமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாழ்வுபாடு கிராமத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 170 பீ.சி.ஆர் பரிசோதனை பரிசோதனையின் போது 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

-குறித்த 35 தொற்றாளர்களும் அப்பகுதியில் மீன் பதனிடும் தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறமையினால் குறித்த கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவினை தற்காலிகமாக தனிமைப்படுத்தும் வகையில் வேண்டு கோள் ஒன்று எங்களினால் கொழும்பு கொவிட்-19 தடுப்பு செயலனியிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் குறித்த கிராமத்தில் உள்ள எம்.என்-70 கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு அந்த பிரதேச மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இவ்வருடம் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 970 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 52 ஆயிரத்து 628 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.