November 22, 2024

தகவல் மூலங்கள் குறித்து கேள்வி :ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே!

முறைசாரா விசாரணைகளுக்காக ஊடகவியலாளர்கள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் ஊடக நடவடிக்கைகள் மற்றும் தகவல் மூலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுவருகின்றமை ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே என யாழ். ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடக அடக்குமுறைகள் அதிகரித்து வரும் நிலையில் யாழ்.ஊடக அமையத்தினால் இன்றைய தினம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை ஊடக அமையத்தில், ஊடக அமைய இணைப்பாளர் கு.செல்வக்குமார் வெளியிட்டார்,

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இலங்கையின் ஊடகப்பரப்பில் கூடிய நெருக்கடிகளையும் மரணங்களையும் கடந்த தசாப்த காலத்தில் எதிர்கொண்ட தரப்பாக தமிழ் ஊடகத்தரப்பே இருந்துவந்துள்ளது.

 

ஆனாலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத  அரசாக இலங்கை இருந்து வருகின்ற நிலையில் மீண்டும் தலைதூக்கி வருகின்ற ஊடக சுதந்திரத்திற்கெதிரான அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருகின்றது.

 

2000ம் ஆண்டில் பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்பின்  மீதான  ஊடகப்படுகொலை கலாச்சாரம் 39இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை காவு கொண்டு நிற்கின்றது.

 

அதேவேளை நூற்றுக்கணக்கிலான ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியிலிருந்து விலகவும் நாட்டை விட்டு வெளியேறவும் இத்தகைய சூழலே காரணமாகியிருந்தது.

 

ஆனாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்கு கூட நீதி வழங்கப்படாத வரலாற்றைக் இலங்கை இன்று வரை கொண்டுள்ளது.நாட்டின் வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஒரு சிலவே.அவற்றிள் கிடப்பில் போடப்பட்டுள்ள தர்மரத்னம் சிவராம் கொலை தொடர்பான வழக்கு ஒன்றாகும்.

 

நிமலராஜன் கொலை தொடர்பிலான வழக்கும்; கடந்த மாதத்துடன் ஒரேயடியாக இழுத்து மூடப்;பட்டுள்ளது.நடந்தேறிய ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையிலான விசாரணை என்பது முக்கிய கோரிக்கையாக யாழ்.ஊடக அமையத்தால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவருகின்றது.

 

இந்நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் மோசமடைந்துவரும் ஊடக சுதந்திரம் அச்சத்தை தருகின்றது.தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் பௌத்த மயமாக்கல், ஆக்கிரமிப்புக்கள், இராணுவ மயமாக்கல், மனித உரிமை மீறல்கள், காரணமற்ற கைதுகள்,ஊழல் மோசடிகள் மற்றும் சுற்றுச்சூழல் அழிப்பு உள்ளிட்டவை தொடர்பிலான செய்திகள் வெளியே வருவதை முடக்க மீண்டும் முனைப்பு காட்டப்பட்டுவருகின்றது.

 

முறைசாரா விசாரணைகளுக்காக ஊடகவியலாளர்கள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் ஊடக நடவடிக்கைகள் மற்றும் தகவல் மூலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுவருகின்றமை ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே.

 

அரச அதிகாரத்தின் வெவ்வேறு வடிவங்களும் இத்தகைய அச்சமூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.அவ்வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது,காரணம் தெரிவிக்கப்படாது சிறை ,நாலாம் மாடி  விசாரணை மற்றும் இரகசிய விசாரணையென அச்சுறுத்துவதன் ஊடாக ஊடகவியலாளர்களை முடக்க மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

 

முன்னதாக சமூக ஊடக பதிவுகளிற்காக கைதானவர்கள் பிணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்க மரணதண்டனை கைதிகள் பொதுமன்னிப்பில் வீடு திரும்பும் கதைகள் இலங்கையில் சாதாரணமாகியுள்ளது.

 

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் செல்வகுமார் நிலாந்தன், மட்டக்களப்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு. ஏறக்குறைய மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.அவர் தனது மின்னஞ்சல் முகவரி மற்றும் பேஸ்புக் கடவுச்சொல், வாட்ஸ்அப் எண் மற்றும் அவரது வங்கி கணக்கு எண்ணை கூட வழங்குமாறு அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

 

மட்டக்களப்பு பத்திரிகையாளர் புண்ணியமூர்த்தி சசிதரன் பல முந்தைய சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஏற்கனவே கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் தனது முகநூல் பதிவிற்காக நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் அச்சுறுத்தி அவரது இரகசிய கடவுச்சொற்கள் பறிக்கப்பட்டிருந்தது.உண்மையில் ஊடகவியலாளர்களது தனிப்பட்ட தகவல்தொடர்பு கடவுச்சொற்களைப் பெற்ற பிறகு, அவரது தகவல் தொடர்பு தனியுரிமை ரத்து செய்யப்படலாம், வேறு எவரும் ஏதேனும் மாற்றங்கள் அல்லது உள்ளீடுகளைச் செய்யலாம் என்பதை இலகுவாக எடுத்துக் கொள்ளமுடியாது.

 

இதேபோன்று கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் முருகையா தமிழ் செல்வன் வடமாகாணசபையின் சுகாதாரத்துறை ஊழல்களை வெளிப்படுத்தியமைக்காக விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.தகவல் மூலத்தை வெளிப்படுத்த கோரி காவல்துறை அத்தியட்சகர் மட்டத்தில் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றது.

 

இதே ஊழல் பற்றி கட்டுரையொன்றைவரைந்த காலைக்கதிர் ஊடகவியலாளர் ந.லோகதயாளன் அதே பாணியில் தொடர்விசாரணைகளை எதிர்பார்த்திருக்கின்றார்.

 

காவல் நிலையத்திற்கு தொடர்விசாரணைகளிற்கு அழைப்பதன் மூலம் அவர்களது ஊடகப்பணியை அச்சமூட்ட முயற்சிகள் தொடர்கின்றன.

 

ஊழலற்ற ஆட்சியமைப்பேன் என கதிரையேறிய தற்போதைய ஜனாதிபதியின் நேரடிப்பிரதியான வடக்கு ஆளுநர் வடமாகாண  ஊழல்களை  கண்டுகொள்ளாது வேடிக்கை பார்த்திருக்க அதிகார மட்டமோ  தம்மை  காப்பாற்ற ஊழல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களை பலியாடாக்கப்பார்க்கின்றது.

 

உள்ளுரில் அரச மட்ட நிர்வாகத்தில் நடைபெறும் மோசடிகளை கூட வெளிக்கொணர்வதை அனுமதிக்காத சூழலில்ஊழலற்ற ஆட்சியமைப்பேன் என்பது வெறும் பேச்சாகவே இருந்துவிடப்போகின்றது.

 

இதேவேளை பளையை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.ஒரு ஊடகவியலாளனது சிறுவயது மகன் சட்டவிரோத மண் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டுள்ளான்.

 

அதேவேளை மற்றொரு ஊடகவியலாளனை கைது செய்ய கோரி  தென்னிலங்கையில் மதகுரு ஒருவர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார்.

 

மறுபுறம் தேசிய அளவில் சிரச,சக்தி போன்ற ஊடகங்கள் அச்சமான சூழலை எதிர்கொள்ள யாழ்ப்பாணத்தில் புகைப்படங்களை செய்தி அறிக்கையிடலில் பயன்படுத்தியதற்காக நாளிதழ்கள் காவல் நிலையங்களிற்கும் நீதிமன்றங்களிற்கும் அலைய வேண்டியேற்படுகின்றது.

 

மறுபுறம் சுற்றுச்சூழலை பாதுகாக்க குரல் கொடுத்த முல்லைதீவு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இன்று வரை நீதி கிட்டியிருக்கவில்லை.

 

அம்பாறை முதல் யாழ்ப்பாணம் ஈறாக ஊடகவியலாளர்களது பணி நாள் தோறும் கேள்விக்குள்ளாகியே வருகின்றது. தமது அன்றாட  செய்தி  அறிக்கையிடலிற்காக ஊடகவியலாளர்கள் போராடவேண்டியேயுள்ளது.

 

வடகிழக்கில் ஊடக சுதந்திரம் கேள்விக்குள்ளான போது வேடிக்கை பார்த்திருந்த தெற்கும் அதன் வலிகளை தற்போது உணர தொடங்கியுள்ளது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிமாணத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் ஊடக அடக்குமுறைகள் மீண்டுமொரு இருண்ட யுகத்தை நோக்கி நாடு செல்கின்றதாவென்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது.

 

அரங்கேற்றப்பட்ட ஊடகப்படுகொலைகளிற்கான நீதி கிட்டாதவரையில்,குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரையில் அதிசயங்கள் ஏதும் நடந்துவிடுமென்ற நம்பிக்கை எவருக்குமேயில்லை.

 

மீண்டும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நிற்கின்ற அதேவேளை ஊடகவியலாளர்களது பாதுகாப்பு மற்றும் சுயாதீனமான பணிக்காக அனைவரையும் குரல் கொடுக்க யாழ்.ஊடக அமையம் வேண்டி நிற்கின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.