மத்திக்கு சோரம் போகவேண்டாம்:சந்திரகுமார்
தமிழர் உரிமைப் போராட்டத்தின் அறுவடையான மாகாண சபை அதிகாரங்களை காக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் வடக்கின் சுகாதாரப் பணியாளர்களின் கையில் தற்போதுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக செய்திக்குறிப்பில் அமைச்சரவையினால் மாகாணசபைகள் மாகாண ஆளுநர்கள் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் 09 மாவட்டப் பொது வைத்தியசாலைகளை உள்ளீர்ப்பதென கடந்த14.06.2021 அன்று தீர்மானிக்கப்பட்டது. இவற்றில் வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி.முல்லைத்தீவு. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலைகளும் உள்ளடங்கியிருந்தன.
இந்த நடவடிக்கை அரசமைப்பின் 13வது திருத்தச்சட்டதின் மூலம் மாகாணங்களுக்குப் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசானது பலவந்தமாகக் கையகப்படுத்தும் முயற்சியாகவே தமிழ்மக்களால் கருதப்படுகிறது
கட்சிபேதம் இன்றி சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இது தொடர்பில் தமது கண்டனத்தினை தெரிவித்ததுடன் சில அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளின் ஆளுகையின் கீழ் உள்ள மாத்தளை நாவலப்பிட்டி மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய மாவட்டப் பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சிற்கு உள்ளீர்ப்பது தொடர்பில் மட்டுமே இதுவரை சுற்றிக்கைகள் மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும் வடக்கில் உள்ள சகல மாவட்டப் பொது வைத்தியசாலைகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சினால் தனிச் சிங்கள மொழியில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறித்து அவ் வைத்தியசாலைகளது பணியாளர்களால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 06ம் திகதி இடப்பட்டு 06/G/PHMA/ABS/2021 இலக்கத்துடன் மத்திய சுகாதர அமைப்பின் பணிப்பாளர் (நிர்வாகம்-06) இனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தின்படி குறித்த வைத்தியசாலைகளில் தற்போது கடமையாற்றும் பணியாளர்களில் மத்திய அரசிற்குள் உள்ளீர்கப்படுவதற்கு உடன்படும் பணியாளர்கள் தமது சம்மதத்தினைத் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளதுடன் அதற்காகத் தனிச்சிங்களப் படிவம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள மாவட்டப் பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அரசிற்குள் உள்ளீர்ப்பது குறித்த சுற்றிக்கைகள் எவையும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் தற்போது மத்திய சுகாதார அமைச்சினால் தனிச்சிங்களத்தில் அனுப்பப்பட்டுள்ள சம்மதப் படிவங்களை நிரப்பி அனுப்பாமல் புறக்கணிப்பதன் மூலம் தமிழர்களது உரிமைப்போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த மாகாண அதிகாரங்களை பாதுகாக்க உதவுமாறு வடக்கில் உள்ள சகல மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்களையும் பணிப்பாளர்களையும் கேட்டுக்கொள்ளவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்