November 22, 2024

மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்ததா மக்?

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம் ஒன்றினால் செயற்கையான முறையில் மிதிவெடி வலையங்கள் ஏற்படுத்தப்பட்டதாக குறித்த தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் எஸ். உதயகுமார் குற்றம் சாட்டினார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வெளிநாட்டை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றினால் வவுனியா பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிறுவனம் தனது செயற்பாடுகளில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்ற நிலையில் அதில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
12.09.2020 அலகு1பட்டிருப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்ட மிதி வெடிகள்  அகற்றப்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் கேள்வி எழுகின்றது.
மிதிவெடிகள் பல எடுக்கப்பட்டாலும் முழுமையான கணக்கு விவரங்கள் காட்டப்படாமல் வெடி மருந்துக்காக மிதிவெடிகள் விற்பனை செய்யப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது மிதி வெடிகள்  அகற்றப்பட்ட பிரதேசத்தில் மிதிவெடிகள் இருப்பதாக செயற்கையாகக் காண்பிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் குறித்த நிறுவனத்தில் இடம் பெற்றுள்ளது.
17.02.2021 சுமார் 147 மிதிவெடிகள் மற்றும் சுமார் 27 கிலோ வெடி மருந்துகளுடன் குறித்த மாவட்டத்தில் பொலிசாரால் சிலர் கைது செய்யப்பட்டமை பலருக்கு தெரியும்.
நாட்டின் பிரஜை என்ற வகையில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாததால்  குறித்த நிறுவனத்தின் மேல்நிலை அதிகாரிகளுடன் முரண்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
குறித்த நிறுவன செயற்பாடுகளில் விளம்பரம் சட்டவிரோத செயற்பாடுகளை வெளிக்கொண்டு வந்த காரணத்தினால் என்னை காரணம் தெரிவிக்காமல் எனது ஒப்பந்த காலம் முடிவடைய முன்னரே பணியிலிருந்து நீக்கப்பட்டேன்.
குறித்த நிறுவனத்தில் மிதிவெடி அகற்றுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மீதும் பாலியல் ரீதியில் மேல் அதிகாரிகளினால் துன்புறுத்தல்கள் இடம் பெற்றது.
குறித்த விடயம் தொடர்பில் தட்டிக்கேட்ட முற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை பணியில் இருந்து நீக்கியதுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றம் சுமத்தி உத்தியோகத்தரை தொடர்ந்தும் பணியில் அமர்த்தியுள்ளனர்.
ஆகவே குறித்த மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனத்தில் இடம் பெறும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் வவுனியா மாவட்டத்திற்கான பதவி நிலை  அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது மிதி வெடி மற்றும் மருந்துகளுடன் தமது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் பொலிசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் எமது நிறுவனத்தில் பணி புரிந்த பெண் பணியாளர் மீது பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் இடம்பெற்றதாகவும், செயற்கையான முறையில் மிதி வெடி வலயங்கள் உருவாக்கப்பட்டதாத் தெரிவிக்கும் கருத்து தொடர்பில் எவ்விதமான முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லை.
குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊழியர் தமது நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்.
ஆகவே எமது நிறுவனத்தின் நிதி  மற்றும் வேலைத்திட்டங்களை கருத்தில் கொண்டு ஊழியர்கள் பலரை ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில் அதற்குரிய ஊதியங்கள் வழங்கப்பட்டே இடை நிறுத்தப்பட்டதாக  அவர் மேலும் தெரிவித்தார்