November 22, 2024

தேர்தல் மாவட்டங்களை 40 வரை அதிகரிக்க யோசனை முன்வைப்பு!!

இலங்கையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமை இலங்கைக்கு பொருத்தமானது எனத் தெரிவித்துள்ள நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பஃவ்ரல்) அமைப்பு தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைத்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (15) கூடியது.

இதன்போதே பஃவ்ரல் அமைப்பு, மேற்கண்டவாறு யோசனைகளை முன்வைத்துள்ளது. பூகோள விடயங்கள், சனத்தொகை மற்றும் ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டே தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிக்குமாறு யோசனையை முன்வைத்துள்ளதாக, அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

“முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறையின் (Advance Voting System) தேவையை தெளிவுபடுத்திய பஃவ்ரல் அமைப்பு அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குரிமையை வழங்குவது அத்தியாவசியமானது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

வேட்பாளர்களின் செலவீனங்களை வரையறுத்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை ஒரே தினத்தில் நடத்துதல், தேர்தல் நாட்காட்டியொன்றைசெயற்படுத்துதல், தேர்தல் முறைமையில் மற்றும் தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைகளை கண்டறிந்து அவற்றை புதுப்பித்தல், அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுத்தல், தண்டப்பணம் மற்றும் தேர்தல் சட்டத்தை புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பிலும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.

இதேவேளை, அனைத்து வாக்காளர்களும் நியாயமான வகையில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துதல், பிரச்சாரங்கள் தொடர்பான
சட்டங்கள் உள்ளிட்ட போதுமான அளவு பெண் பிரதிநிதித்துவத்தை
உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளது.

வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பிரகடனப்படுத்துதல்,
தேசியப்பட்டியல் முறையின் ஊடாக வேட்பாளர்களை தெரிவு செய்தல், தேர்தல்
ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை பாதுகாத்தல் மற்றும் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் முறைமை தொடர்பிலும் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீண்ட நேரம் குழுவில் கருத்துத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவது சாத்தியமில்லை” என இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் பிரசார செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக துரிதமாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்