அரசியல் கைதிகளிற்கும் தடுப்பூசி?
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நான்காவது சுற்று சிறைச்சாலைக்குள் பரவத்தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசன் தருமராசா என்ற தமிழ் அரசியல் கைதி கொரோனா தொற்றுக்குள்ளாகி வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்;பட்டிருந்த செல்லத்துரை கிருபாகரன் என்ற அரசியல் கைதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நாட்டுக்கு கணிசமான அளவு தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டு வருகின்றதன் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம.; அந்த வகையில், நெடுநாள் நோய் நொடிகளோடு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஆபத்தில் இருந்து மீட்க வேண்டியது அரசின் கடமையாகும்.
சிறைத்துறையும் மருத்துவத்துறையும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மாற்றான் தாய் மனப்பாங்குடன் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். தேவையாயின் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்களை மாற்றி யாழ் போதனா வைத்தியசாலையில் தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.