இருண்ட யுகத்தினுள் நாடு செல்கிறது:ஜோதிலிங்கம்!
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செய்வதுடன் பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை வாபஸ் பெறவேண்டுமென சமூகவிஞ்ஞான ஆய்வு மைய இணைப்பாளரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே சிஅ.ஜோதிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியமைக்காக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசேப் ஸ்ராலின் உட்பட 19 ஆசிரியர்கள் முல்லைத்தீவு கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அடிப்படை உரிமை மீறலாக இருப்பதனால் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆளுங்கட்சி நிகழ்வுகளில் சுகாதார விதிமுறைகளை மீறி பலர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் எவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. சுகாதார விதிமுறைகளுடன் ஆர்ப்பாட்டம் நடாத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு மாற்றுடைகள் வழங்குவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எந்த தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுக்கின்றோம் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. முகாமுக்கு வரும் வரை போதுமான உணவு வகைகளும் வழங்கப்படவில்லை.
முகாமில் மாற்றுடைகள் இல்லாததினால் படுக்கை விரிப்புக்களையே மாற்றுடைகளாக அணிய வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. இந்த மோசமான புறக்கணிப்புக்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மாற்றுடைகள் இல்லாமல் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனரென கடந்த வெள்ளி இரவு கொழும்பிலிருந்து நண்பர்கள் அறிவித்தனர்.
உடனடியாகவே சமூகவிஞ்ஞான ஆய்வு மைய இணைப்பாளராகிய நானும் , யாழ் .மாநகர முதல்வர் மணிவண்ணனும் , வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் நிரோசும் , ஊடகவியலாளர் காண்டீபனும் மாற்றுடைகள் கொள்வனவு செய்து கடந்த சனிக்கிழமை நண்பகல் முல்லைத்தீவு விமானப்படை முகாமிற்கு கொண்டு சென்று அவற்றை வழங்கினோம்.
கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக விவகாரம் இலங்கைத்தீவில் வாழும் அனைத்து மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விவகாரமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை நான்கு காரணங்களுக்காக இதில் அக்கறைப்படவேண்டியுள்ளது.
இதில் முதலாவது கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் ஏனைய பல்கலைக்கழக ஒழுங்கிலிருந்து விலகி தனியான பல்கலைக்கழகமாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்க இருக்கின்றது. பாதுகாப்பு கற்கை நெறியைத்தவிர சமூக விஞ்ஞானம் பொறியியல் கற்கைத்துறைகளும் அங்கு இடம்பெற உள்ளன. இவ்வாறு தனியாகச் செயற்படுவது பொதுக்கல்வியைப் பாதிக்கும்.
இன்று அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழேயே இயங்குகின்றன. எனவே இச்சட்ட மூலத்தை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது.
இரண்டாவது சுகாதார விதிமுறைகளுடன் ஆர்ப்பாட்டத்தை நடாத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டமை ஒரு அடிப்படை உரிமை மீறலாகும்.அடிப்படை உரிமை மீறல் எங்கு இடம் பெற்றாலும் அதற்கு எதிராகப் போராடுவதும் , போராட்டம் நடாத்தியவர்ளுக்கு ஆதரவு வழங்குவதும் தமிழ் மக்களது கடமையாகும்.
மூன்றாவது இலங்கை ஆசிரியர் சங்கம் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுள்ளது. அதன் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றது. இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசேப் ஸ்ராலின் தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளுக்காக தென்னிலங்கையில் குரல் கொடுத்து வருகின்றார். போராட்டங்களை நடாத்துகின்றார். எனவே தமிழ் மக்களின் நட்புச்சக்திகளாகிய இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.
நான்காவது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் சிங்கள மக்களில் ஒரு பகுதியினரது ஆதரவையாவது வென்றெடுப்பது அவசியமாகும். இப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதன் மூலமும், போராட்டத்தில் பங்கு பெறுவதன் மூலமும் சிங்கள மக்களோடு நாமும் நிற்கின்றோம். என்ற செய்தியை வழங்குகின்றோம். இது எதிர் காலத்தில் சிங்கள மக்களில் ஒரு பகுதியினரையாவது எமது போராட்டத்திற்கு சார்பாக வென்றெடுப்பதற்கு உதவிக்கரமாக அமையும் , எனவே தமிழ் மக்கள் சார்பாக பின்வரும் மூன்று கோரிக்கைகளை இலங்கை அரசிடம் முன்வைக்கின்றோம்
ஜோசேப்ஸ்ராலின் உட்பட இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களை தனிமைப்படுத்தலிருந்து உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், பொதுக்கல்வியை சீரழிக்கும் கொத்தலாவ பல்கலைக்கழக சட்ட மூலத்தை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்,ஆசிரிய சமூகத்தின் அனைத்து உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்- என்றார்.