November 22, 2024

“கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு பெருமைப்பட்டிருப்பார்” – வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலையை வழங்கினார்.

அதன் பின் நிருபர்களை சந்தித்த நடிகர் வடிவேலு கூறியதாவது:-

“முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக  சந்தித்தேன். அவரை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.

ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார். இது, மக்களுக்கு பொற்காலம்.கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியைக் கண்டு பெருமை அடைந்திருப்பார் .

தமிழக முதல்வரே தெருத்தெருவாகச் சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்.

நான் ரெண்டு தடுப்பூசி போட்டுட்டேன். இன்னும் நாற்பது ஊசி போடச்சொன்னாலும் போடுவேன். ஏன்னா, இன்னும் பீதியா இருக்கே… அதனால, மக்களே முன்வந்து ஊசி போடணும்.

சினிமாவுல இருந்து சீரியல் வந்துச்சு. இப்ப ஓடிடி-னு அடுத்தடுத்த டெக்னாலஜிக்கு போயிட்டுத்தானே இருக்கு. சினிமா பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தினு போய்க்கிட்டே இருக்கு. இது இன்னொரு குட்டி போடும். ஓடிடி அது இன்னொரு குட்டி போடும். அப்படியே போய்க்கிட்டேதானே இருக்கும். காலத்திற்கு தகுந்த மாதிரி நாமளும் நடிச்சிட்டே போக வேண்டியதுதான்.”

இவ்வாறு வடிவேலு கூறினார்.

கொங்குநாடு சர்ச்சை குறித்து விமர்சித்த அவர், “ராம்நாடுனு ஒண்ணு இருக்கு. ஒரத்தநாடுனு ஒண்ணு இருக்கு. இப்படி நிறைய போய்க்கிட்டு இருக்கு. நல்லா இருக்கற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு..? நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது..?  இதெல்லாம் பேசும்போது தல சுத்துது” என்றார்.